மைனர் பெண் பலாத்கார வழக்கை விசாரித்ததில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

மங்களூருவில் மைனர் பெண் பலாத்கார வழக்கில் கைதானவர்களிடம் சரியாக விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மங்களூரு கோர்ட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-06-22 18:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் மைனர் பெண் பலாத்கார வழக்கில் கைதானவர்களிடம் சரியாக விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மங்களூரு கோர்ட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறுமி பலாத்காரம்

மங்களூரு நகரப்பகுதியை சேர்ந்தவர் மைனர் பெண். கடந்த 2021-ம் ஆண்டு இந்த மைனர் பெண்ணை 3 பேர் பலாத்காரம் செய்ததாக மங்களூரு நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் மைனர் பெண்ணின் தந்தையான சந்தேஷ் மற்றும் கூலி தொழிலாளி பிரசாத் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மைனர் பெண் கடந்த 2022-ம் ஆண்டு தந்தை தன்னை பலாத்காரம் செய்யவில்லை. வேறு ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். இதையடுத்து மங்களூரு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஷ், அவர்கள் 3 பேரையும்,  குற்றமற்றவர்கள் என்று கூறி அறிக்கை அளித்தார்.

கோர்ட்டில் மனு

இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இரு தரப்பினர் சார்பிலும் வக்கீல்கள் வாதாடினர். அப்போது மைனர் பெண் தரப்பில் வாதாடிய வக்கீல், மைனர் பெண்ணிடம் சரியான விசாரணை நடத்தவில்லை. இதனால் மைனர் பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் கைதான 3 பேருக்கும் மரபணு பரிசோதனை செய்து, மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என்பதை கண்டுபிடித்திருக்கவேண்டும்.

ஆனால் போலீசார் தந்தை மற்றும் கூலி தொழிலாளிகளிடம் மரபணு பரிசோதனை செய்யவில்லை. வேண்டுமென்றே பழி சுமர்த்தி கைது செய்துள்ளனர். தற்போது போலீசாருக்கு ஆதாரம் கிடைக்காமல் 3 பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

ரூ.5 லட்சம் அபராதம்

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று இறுதி தீர்ப்பு அளிப்பதாக கூறினார். அதன்படி நேற்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி கே.எம்.ராதா கிருஷ்ணன், மைனர் பெண் பலாத்கார வழக்கில் கைதான 3 பேருக்கும் மரபணு பரிசோதனை செய்திருக்கவேண்டும்.

போலீசார் அலட்சியமாக செயல்பட்டதுடன், இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆதரவாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது வேண்டுமென்றே 3 பேரை கைது செய்து விடுவித்ததுபோன்று உள்ளது. இதனால் மைனர் பெண்ணின் தந்தை மற்றும் கூலி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் விசாரணை

எனவே அவர்களுக்கு போலீசார் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். அதாவது மங்களூரு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கை சரியாக விசாரணை நடத்த தவறியதால், அவர் ரூ.5 லட்சம் அபராதமாக செலுத்தவேண்டும்.

இதில் 4 லட்சம் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் தந்தைக்கும், மீதமுள்ள ரூ.1 லட்சத்தை 2 கூலி தொழிலாளிகளுக்கும் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை உள்துறை முதன்மை செயல் அதிகாரி, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்