நீட் விவகாரம்; குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தவும், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

Update: 2024-06-20 14:52 GMT

புதுடெல்லி,

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4-ந்தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் இன்று மாலை அளித்த பேட்டியின்போது, நீட் தேர்வு முறைகேடு பற்றி வல்லுநர் குழு ஆய்வு செய்யும். குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நீட் தேர்வின் வெளிப்படை தன்மையில் எந்தவித சமரசமும் கிடையாது. மாணவர்களின் நலனே முக்கியம். அதனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, பீகார் அரசிடம் முழு விவரங்களையும் அளிக்கும்படி மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தவும், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள், டெலிகிராம் செயலியில் கசிந்துள்ளது. வினாத்தாள் கசிவு குறித்து சைபர் கிரைம் போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்