எல்லையில் பதற்றநிலை பற்றி நேர்மையான ஆலோசனை தேவை: சீனாவிடம் கூறிய இந்தியா

இந்தியா, சீனா இடையேயான எல்லை பதற்றங்களை பற்றி நேர்மையான முறையில் ஆலோசிக்க வேண்டிய தேவை உள்ளது என குவின் கேங்கிடம் இந்திய வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.

Update: 2023-03-02 14:01 GMT

புதுடெல்லி,


டெல்லியில் அனைத்து ஜி-20 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஜி-20 வெளியுறவு மந்திரிகளுடனான கூட்டத்திற்கு பின் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசும்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று மதியம் சீன மந்திரியை சந்தித்தேன். வெளியுறவு மந்திரியாக அவர் பதவியேற்ற பின்னர் எங்களுக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பில், எங்களுடைய உரையாடலில் பல விசயங்கள், நம்முடைய நாடுகளின் தற்போதுள்ள உறவு பற்றியே அமைந்து இருந்தது. உங்களில் பலர், நான் முன்பே விவரித்து கேட்டிருந்தது போன்று, இருதரப்பிலும் காணப்படும் பதற்ற நிலை பற்றி பேசப்பட்டது.

இரு நாடுகளிடையேயான உறவில் உண்மையான பிரச்சனைகள் உள்ளன. அவற்றை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை மிக வெளிப்படையாக மற்றும் நேர்மையான முறையில் ஆலோசிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அதனையே நாம் இன்று கோரி வருகிறோம் என கூறியுள்ளார். இரு மந்திரிகள் இடையேயான இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்