மங்களூரு அருகே ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை பலி

மங்களூரு அருகே பெங்களூருவைச் சேர்ந்த அக்காள்-தங்கை ஆற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-05-09 18:45 GMT

மங்களூரு-

மங்களூரு அருகே பெங்களூருவைச் சேர்ந்த அக்காள்-தங்கை ஆற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சகோதரிகள்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்பா அருகே கன்கல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் அம்மன்னய்யா. என்ஜினீயரான இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஹம்சிதா(வயது 15), அவந்திகா(11) என 2 மகள்களும் இருந்தனர். இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள்.

தற்போது பள்ளி விடுமுறையையொட்டி அவர்கள் 2 பேரும் தனது தாயுடன் தங்கள் சொந்த ஊரான கன்கல் கிராமத்திற்கு சென்றனர். அவர்கள் சதீசின் சகோதரர் உதய் அம்மன்னய்யாவின் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு நடக்க இருந்த குடும்ப விழாவில் கலந்து கொள்ளவும் இருந்தனர்.

ஆற்றில் மூழ்கி பலி

நேற்று முன்தினம் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கென்யா-கன்கல் பகுதியில் ஓடும் குமாரதாரா ஆற்றங்கரைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த பகுதி உதய் வீட்டின் அருகே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஹம்சிதா மற்றும் அவந்திகா ஆகிய 2 பேரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் இறங்கினர்.

ஆற்றின் ஆழத்தை அறியாத அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதை குடும்பத்தினர் பார்த்து அவர்களை மீட்பதற்குள் இருவரும் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி சுப்பிரமணியா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி சிறுமிகள் 2 பேரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் இரவு வரை அவர்களது தேடுதல் வேட்டை நீடித்தது. பின்னர் இரவில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களது உடல்களைப் பார்த்து அவர்களுடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். அதை பார்க்கும்போது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்