400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் அரசு அமைப்பார் என்பது உலகுக்கே தெரியும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2024-03-15 00:42 GMT

கோப்புப்படம் 

கோக்ரஜார்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் நேற்று உறுதிபட கூறினார்.

அசாமில் கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இது தொடர்பாக கூறியதாவது:-

மத்தியில் எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் என்ன முடிவு வரும் என்பது இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் தெரியும். மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் அரசு அமைப்பார் என்பது உலகுக்கே தெரியும்.

மோடி அரசு ஏழைகளின் வாழ்க்கையை வெகுவாக மேம்படுத்தி இருக்கிறது. குடிசை வீடுகளுக்கு பதிலாக அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 3-வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அசாமில் குடிசை வீடுகளே இருக்காது. ஒவ்வொருவரும் கான்கிரீட் வீடு பெறுவார்கள் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்