காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற சவால்களை பா.ஜ.க. அரசு முறியடித்தது: வெள்ளை அறிக்கையில் தகவல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-08 12:22 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகால மன்மோகன் சிங் அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் 2014ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது, டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்து என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்ததாகவும், காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும். எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்றும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்து, இந்தியாவை நிலையான வளர்ச்சி பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்