'அமைதியாக வாழ்ந்தால் உங்களை வாழ விடுகிறோம் இல்லையேல்...' - மத அமைப்பின் பேரணியில் எச்சரிக்கை விடுத்த சிறுவன்

’அமைதியாக வாழ்ந்தால் உங்களை நாங்கள் நமது நாட்டில் வாழ விடுவோம் இல்லையே...’ என்று பேசிய சிறுவனின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

Update: 2022-05-23 14:31 GMT

கொச்சி,

கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் 'குடியரசை காப்போம்' என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ஒரு நபர் தனது தோளில் ஒரு சிறுவனை சுமந்து சென்றார்.

அந்த சிறுவன் சர்ச்சைக்குரிய வகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவன் எழுப்பிய கோஷத்தில், உங்கள் (இந்து மதத்தினர்) இறுதிச்சடங்கிற்கு அரிசி மற்றும் பூக்களை தயார் செய்துவைத்துக்கொள்ளுங்கள். நான் ஒன்றை மறந்துவிட்டேன். உங்கள் (கிறிஸ்தவ மதத்தினர்) இறுதிச்சடங்கிற்கு ஊதுபத்திகளை வாங்கி உங்கள் வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் எமன் வந்துகொண்டிருக்கிறான். நீங்கள் அமைதியாக வாழ்ந்தால், உங்களை நாங்கள் நமது நாட்டில் வாழ விடுவோம். நீங்கள் அமைதியாக வாழவில்லையென்றால்... உங்களுக்கு எவ்வாறு சுதந்திரம் (மரணம்) கொடுக்க வேண்டுமென எங்களுக்கு தெரியும். அமைதியாக வாழுங்கள்' என அந்த சிறுவன் கோஷம் எழுப்பினான்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சிறுவன் கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச அனுமதித்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்