டெல்லியில் இருந்து நாசிக் சென்ற விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கம்..!
டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து இன்று காலை நாசிக் நகருக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, நடுவழியில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இதுபோன்ற தொடர் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று காலை 6.54 மணிக்கு, ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி-8363 டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆனால் நாசிக் நோக்கி சென்ற அந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் ஆட்டோ பைலட் எனப்படும் தன்னியக்க விமானி செயல்பட்டில் ஏற்பட்ட திடீர் சிக்கலால் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அதிலிருந்த பயணிகள் சிறிய ரக கியூ400 விமானத்திற்கு மாற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.789 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக புதன்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.