கடும் நிதிச்சுமை; காருக்குள் மனைவி, மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 58 வயது நபர் தற்கொலை

காருக்குள் மனைவி, மகனுக்கு தீ வைத்து தானும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 58 வயது நபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-19 18:36 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஜெய்தாலா பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ் கோபால்கிருஷ்ண பட் (வயது 58). இவருக்கு சங்கீதா பட் (வயது 55) என்ற மனைவியும், நந்தன் (வயது 30) என்ற மகனும் உள்ளனர்.

இதனிடையே, சமீபகாலமாக குடும்பத்தில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், ராம்ராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஓட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிடுவோம் என கூறி ராம்ராஜ் தனது மனைவி மற்றும் மகனை காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். ஹப்ரி புனர்வசன் என்ற பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் காரை நிறுத்திய ராம்ராஜ் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் நந்தன் மீதும் ஊற்றினார்.

என்ன நடக்கிறது என்பதை இருவரும் உணர்வதற்குள் ராம்ராஜ் தன் மீது தீயை பற்றவைத்து தனது மகன், மனைவி மீதும் தீயை பற்றவைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், மகனும் காரில் இருந்து கிழே குதித்தனர். ஆனாலும், அவர்கள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.

ஆனால், பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்த ராம்ராஜ் காருக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கீதா மற்றும் நந்தன் ஆகிய 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், பற்றி எரிந்த காரை தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர், காரில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த ராம்ராஜின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ராம்ராஜின் வீட்டில் இருந்து தற்கொலை கடித்தத்தை கைப்பற்றினர். அந்த கடித்தத்தில் நிதிச்சுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக ராம்ராஜ் எழுதி வைத்துள்ளார். ஆனால், ராம்ராஜ் இவ்வாறு நடந்துகொள்வார் என்பது அவரது மனைவிக்கும், மகனுக்கும் தெரியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்