வீட்டில் இருந்து மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்பு

தீர்த்தஹள்ளி அருகே வீட்டில் இருந்து மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் குடும்ப தகராறில் கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2023-06-03 18:45 GMT

சிவமொக்கா:-

மாயமான பெண்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா தேவங்கியை அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியா. இவரது மனைவி சசிகலா(வயது 34). இருவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சசிகலா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சசிகலாவை அவரது கணவரும், குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர்.

ஆனால் சசிகலா குறித்த எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உடனே அவர், இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை தேடினர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திராநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பெண் ஒருவரின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீர்த்தஹள்ளி போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் காணாமல் போனதாக தேடப்பட்ட சசிகலா என்று தெரியவந்தது. குடும்ப தகராறில் கணவனிடம் கோபித்துக் கொண்டு, வீட்டின் அருகேயுள்ள வனப்பகுதிக்கு சென்ற சசிகலா அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்