'வெறுப்பு, வன்முறையால் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலத்தை ஏற்க என் மதம் கற்றுத்தரவில்லை' - திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்

அபிஷேக் பானர்ஜியின் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 23:37 GMT

Image Courtesy : ANI

கொல்கத்தா,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(இன்று) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக இந்த விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் நிகழ்ச்சி எனக் கூறி, காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பை நிராகரித்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெறுப்பு, வன்முறை மற்றும் அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஆகியவற்றால் கட்டப்பட்ட கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ, குருத்வாராவோ அல்லது எந்த ஒரு வழிபாட்டுத் தலமாகவோ இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவும், தழுவவும் எனது மதம் எனக்கு கற்றுத்தரவில்லை" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்