குழந்தை பெற்று தராத மனைவிக்கு முத்தலாக்; கணவன் மீது வழக்கு

சத்தீஷ்காரில் குழந்தை பெற்று தராத மனைவிக்கு தொலைபேசியில் முத்தலாக் கொடுத்த கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-19 10:10 GMT

ஜாஷ்பூர்,

சத்தீஷ்காரில் குழந்தை பெற்று தராத காரணத்திற்காக தனது மனைவிக்கு தொலைபேசி வழியே முத்தலாக் கொடுத்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி சத்தீஷ்காரில் ஜாஷ்பூர் நகரின் குங்குரி காவல் நிலையத்தின் போலீஸ் உயரதிகாரி பாஸ்கர் சர்மா கூறும்போது, தனது கணவர் தொலைபேசி வழியே தனக்குமுத்தலாக் கொடுத்து விட்டார் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண், கடந்த 2007ம் ஆண்டு ஜார்க்கண்டின் பாலுமத் பகுதியை சேர்ந்த இஷ்தியாக் ஆலம் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், குழந்தை பெற்று தரவில்லை என கூறி அவரது கணவர் மற்றும் மாமனார் இருவரும் அந்த பெண்ணை கொடுமை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதனால், சில காலம் தனது பிறந்த வீட்டுக்கு அந்த பெண் சென்றுள்ளார். பின்னர் தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்து போகும்படி கூறியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணின் கணவர் தொலைபேசியிலேயே அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டார். இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம். குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை விரைவில் கைது செய்வோம் என உயரதிகாரி கூறியுள்ளார்.

கணவர் இஷ்தியாக் அந்த பெண்ணுடனான பேச்சை நிறுத்தி விட்டதுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

முத்தலாக் தடை சட்ட மசோதா கடந்த 2019ம் ஆண்டில் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை முத்தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்