தங்க சுரங்க நிலம் முழுவதும் கர்நாடக அரசிடம் வழங்க மத்திய அரசு விருப்பம்; தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி தகவல்

கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்க நிலத்தை முழுவதுமாக கர்நாடக அரசிடம் வழங்க மத்திய அரசு விரும்புவதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.;

Update:2022-12-28 03:18 IST

பெலகாவி:

கோலார் தங்கவயலில் உள்ள தங்க சுரங்க நிலத்தை முழுவதுமாக கர்நாடக அரசிடம் வழங்க மத்திய அரசு விரும்புவதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.

கர்நாடக மேல்-சபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் வெங்கடேஷ் கேட்ட கேள்விக்கு தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பதிலளிக்கையில் கூறியதாவது:-

30 சதவீத வரி

கர்நாடகத்தில் தொழிற்பேட்டைகளில் இருந்து வசூலாகும் வரியில் 30 சதவீதத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். மீதமுள்ள 70 சதவீத வரி பிற நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும். கர்நாடகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு 1.20 லட்சம் ஏக்கர் நிலம் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்காக கையகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த நிலம் அரசாணையில் இருந்து விடுவிக்கப்பட்டது.

பெங்களூருவில் சமீபத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்காக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள மொத்த நிலத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே நாங்கள் தொழில் நோக்கத்திற்கு பயன்படுத்துகிறோம்.

தங்க சுரங்க பணிகள்

விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலத்தை அரசு கையகப்படுத்தியதாக கூறுவது தவறு. விவசாயிகளின் ஒப்புதல் பெற்ற பிறகே நிலத்தை கையகப்படுத்துகிறோம். கோலார் தங்கவயலில் தங்க சுரங்க பணிகளுக்காக மத்திய அரசுக்கு 13 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு வழங்கியது. அவற்றில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டோம்.

அதில் 3,500 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது. அந்த நிலத்தை நில அளவீடு செய்தபோது, அதில் பெரும் பகுதி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நிலத்தில் சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். மத்திய அரசு தங்க சுரங்க நிலம் முழுவதையும் திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளது. அந்த நிலத்தின் மதிப்பை விட அதன் மீதான கடன் அதிகமாக உள்ளது.

3,500 ஏக்கர் நிலம்

அதனால் நாங்கள் முதல்கட்டமாக 3,500 ஏக்கர் நிலத்தை மட்டும் வழங்குமாறும், பின்னர் அடுத்த கட்டமாக மீதமுள்ள நிலத்தை பெற்று கொள்வதாகவும் கூறியுள்ளோம். அங்குள்ள சுரங்க மண்ணில் தங்கத்தை பிரித்து எடுக்க முடியும். அதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும் என்பது தெரியாது. தங்கத்தை பிரித்து எடுத்த பிறகு அந்த கழிவு மண்ணை எங்கே கொட்டுவது என்பதில் குழப்பம் உள்ளது. அங்குள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில் 960 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் உள்ளது. அது வருவாய்த்துறையின் கீழ் உள்ளது. அந்த நிலத்தை வழங்குமாறு கேட்டுள்ளோம்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்