10 பேர் எரித்துக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிபிஐ காவலில் மரணம் - போலீசார் வழக்குப்பதிவு
10 பேரையும் கடுமையாக தாக்கிய கும்பல் அவர்களை வீட்டிற்குள் வீசி தீ வைத்தது.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் பீர்ப்ஹம் மாவட்டம் ராம்பூர்கட் பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் வன்முறை வெடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி பகது ஷேக் கொல்லப்பட்டது தொடர்பாக இந்த வன்முறை வெடித்தது.
பகது ஷேக்கின் ஆதரவாளர்கள் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேரை கடுமையாக தாக்கினர். பின்னர், அந்த 10 பேரையும் ஒரு வீட்டிற்குள் பூட்டி வீட்டை ஒட்டுமொத்தமாக தீவைத்து கொளுத்தினர். இதில், 10 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதில், 10 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி லாலன் ஷேக் என்ற நபரை கடந்த 4ம் தேதி ஜார்க்கண்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லாலன் ஷேக் பீர்ப்ஹம் மாவட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு வன்முறை தொடர்பாக லாலனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 10 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி லாலன் ஷேக் தற்கொலை செய்துகொண்டதாக சிபிஐ நேற்று அறிவித்தது.
சிபிஐ அலுவலகத்தில் உள்ள கழிவறையில் லாலன் ஷேக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், சிபிஐ அதிகாரிகள் தாக்கியதாலேயே லாலன் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சிபிஐ காவலில் இருந்த லாலன் ஷேக் மரணம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மீது மேற்குவங்காள போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிபிஐ அதிகாரிகள் மீது மேற்குவங்காள போலீசார் பதிவு செய்துள்ள கொலை வழக்கை எதிர்த்து ஐகோர்ட்டில் சிபிஐ வழக்குத்தொட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் படிக்க... மேற்குவங்காளம்: 8 பேர் எரித்துக்கொலை - வெளியான திடுக்கிடும் தகவல்