மும்பை குண்டு வெடிப்பு; தண்டனை நிறைவுக்கு பின் அபு சலீமை அரசு விடுவிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனையில் உள்ள அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Update: 2022-07-11 06:50 GMT



புதுடெல்லி,



மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பொதுமக்களில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கின் மீது கடந்த 2007ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 100 பேருக்கு 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை தீர்ப்பு விதித்து உத்தரவிடப்பட்டது.

இதன் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தாதா தாவூத் இப்ராகிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான மற்றொரு வழக்கு மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தாதா அபு சலீம், முஸ்தபா தோசா ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கயூம் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அபு சலீம், இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான நாடு கடத்தும் ஒப்பந்தத்தின்படி, 25 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தண்டனையை நீட்டிக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றிய வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அமர்வு முன் இன்று நடந்தது. போர்ச்சுகல்லுக்கு சலீமை திரும்ப ஒப்படைக்கும் பணியை செய்வதில் கவுரவமுடன் நடந்து கொள்ள மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. 25 ஆண்டுகள் தண்டனைக்கு பின் சலீமை விடுவிக்கும் முடிவில் அரசு உள்ளது.

எனினும், வருகிற 2030ம் ஆண்டு வரை அபு சலீமை விடுவிக்க முடியாது. 25 ஆண்டுகள் தடுப்பு காவல் காலகட்டம் நிறைவடைந்த பின்னர், இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான நாடு கடத்தும் ஒப்பந்தம் பற்றி ஜனாதிபதிக்கு மத்திய அரசு ஆலோசனைகளை வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

அதற்கு தேவையான ஆவணங்களை 25 ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளை தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அரசே மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

1993ம் ஆண்டில் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றிய வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அபு சலீம், நீண்டகால சட்ட போராட்டத்திற்கு பின்பு போர்ச்சுகல் நாட்டில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 11ந்தேதி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்