தென்ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைகள் இந்தியா வருகை

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2023-02-18 10:47 GMT

புதுடெல்லி,

தீவிர வேட்டை, இருப்பிட அழிவு காரணமாக இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் கடந்த 1952-ம் ஆண்டு முற்றிலுமாக அழிந்துவிட்டன. இந்நிலையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 5 பெண், 3 ஆண் உள்ளிட்ட 8 சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டார்.

இதையடுத்து தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் இருந்து 12 சிறுத்தைப்புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிறுத்தைப்புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும். அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறுத்தைப்புலிகளை மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விட்டனர். அங்கு 30 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரிக்கப்பட்ட பின்னர், சிறுத்தைகள் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 12 சிறுத்தைப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்