மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுப்பெண் சாவு
ஒலேநரசிப்புரா அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் புதுப்பெண் உயிரிழந்தார். விருந்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.;
ஹாசன்:-
புதுமண தம்பதி
ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா இப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவருக்கும் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குடிகே கிராமத்தை சேர்ந்த ஷோபா (வயது 25) என்பவருக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு ஷோபா தனது கணவருடன் இப்பாடி கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஒலேநரசிப்புராவில் உள்ள உறவினர் ஒருவர் புதுமண தம்பதியை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் புதுமண தம்பதியான நவீனும், ஷோபாவும் மோட்டார் சைக்கிளில் ஒலேநரசிப்புரா நோக்கி சென்றனர்.
லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
அப்போது அவர்கள், ஒலேநரசிப்புரா அருகே நாகல்புரா கேட் பகுதியில் சென்றபோது, பின்னால் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஷோபா, லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இந்த விபத்தில் ஷோபா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லாரி சக்கரத்தில் சிக்கிய ஷோபா சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
நவீன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனது கண்எதிரே மனைவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பதை பார்த்து நவீன் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலேநரசிப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருமணமாகி ஒரு மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.