62 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: டெல்லி, மும்பையில் ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்

62 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி, மும்பையில் ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய அதிசயம் நடந்துள்ளது.;

Update:2023-06-26 02:02 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 8-ந் தேதிதான் தொடங்கியது. அதுபோல், வழக்கமாக மும்பையில் ஜூன் 11-ந் தேதியும், டெல்லியில் ஜூன் 27-ந் தேதியும் அந்த பருவமழை தொடங்கும்.

ஆனால், இந்த ஆண்டு டெல்லியிலும், மும்பையிலும் நேற்று ஒரே நாளில் பருவமழை தொடங்கியது. டெல்லியில், திட்டமிட்ட தேதிக்கு 2 நாட்கள் முன்பாகவும், மும்பையில் 2 வாரங்கள் தாமதமாகவும் தொடங்கியது.

62 ஆண்டுகளுக்கு பிறகு..

கடந்த 1961-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி, இதேபோன்று இரு நகரங்களிலும் ஒரே நாளில் பருவமழை தொடங்கியது. 62 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்த அதிசயம் மீண்டும் நிகழ்ந்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் மூத்த விஞ்ஞானி டி.எஸ்.பாய் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் உள்ள தான்சா வானிலை மையத்தில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது. அதே காலகட்டத்தில், மும்பையில் உள்ள சான்டாகுரூஸ் வானிலை மையத்தில் அதிகபட்சமாக 176 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

புயலே காரணம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காஷ்மீர், லடாக், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கியது.

ஆனால், மும்பை போன்ற மத்திய மாநிலங்களில் தாமதமாக தொடங்கியுள்ளது. இதற்கு 'பிபர்ஜாய்' புயலின் பயணவழிதான் காரணம் என்று மூத்த விஞ்ஞானி டி.எஸ்.பாய் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்