'கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை' - டி.கே.சிவகுமார்
நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மேலிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அவர்களுக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது என தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை பா.ஜ.க. தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. அதிலும் கர்நாடகாவில் பா.ஜ.க.வினர் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். எங்களின் ஓராண்டு நல்லாட்சியால் இங்கு காங்கிரஸ் அலை வீசுகிறது. பா.ஜ.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.
எங்களது ஆட்சியால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான நன்மைகள் கிடைத்துள்ளது. எனவே காங்கிரஸ் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றும். இதனை நான் சாதாரண நம்பிக்கையில் கூறவில்லை. அதீத நம்பிக்கையில் கூறுகிறேன்."இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.