கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக 7 பேரும் போட்டியின்றி தேர்வு; இன்று அறிவிப்பு வெளியாகிறது

7 இடங்களுக்கு எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக 7 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

Update: 2022-05-26 21:41 GMT

பெங்களூரு

7 இடங்களுக்கு எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக 7 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

வாபஸ் பெற மாட்டார்கள்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந் தேதி நிறைவடைந்தது. 7 இடங்களுக்கு 7 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். அதாவது பா.ஜனதா சார்பில் லட்சுமண் சவதி, சலவாதி நாராயணசாமி, ஹேமலதா நாயக், கேசவ் பிரசாத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் டி.ஏ.ஷரவணாவும் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 7 பேரின் மனுக்களும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக கூறி அதை ஏற்று கொண்டதாக தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் விசாலாட்சி அறிவித்தார். இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். போட்டி இல்லை என்று ஏற்கனவே உறுதியாகிவிட்டது. யாரும் மனுக்களை வாபஸ் பெற மாட்டார்கள்.

மேல்-சபை உறுப்பினர்கள்

அதனால் இன்று மதியம் 3 மணிக்கு 7 பேரும் மேல்-சபை உறுப்பினர்களாக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட உள்ளார். அதன் பிறகு அவர்களுக்கு எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த தேர்தல் எம்.எல். ஏ.க்கள் மூலம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்