ஆசிரியர்-பட்டதாரி தொகுதி தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் காலியாவதையொட்டி நடந்த ஆசிரியர்-பட்டதாரி தொகுதி தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-06-14 21:23 GMT

பெங்களூரு

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் காலியாவதையொட்டி நடந்த ஆசிரியர்-பட்டதாரி தொகுதி தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4 தொகுதிகளுக்கு தேர்தல்

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் அடுத்த மாதம் காலியாக உள்ளன. இதையடுத்து, வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி, கர்நாடக வடமேற்கு ஆசிரியர் தொகுதி, கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதி ஆகியவற்றுக்கான தேர்தல் ஜூன் 13-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருந்தது.

வடமேற்கு பட்டதாரிகள் தொகுதியில் 59 சதவீத வாக்குகளும், தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் 70 சதவீதமும், வடமேற்கு ஆசிரியர்கள் தொகுதியில் 80 சதவீதமும், மேற்கு ஆசிரியர்கள் தொகுதியில் 84 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில், 4 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதாவது கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மைசூருவிலும், மற்ற 3 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை பெலகாவியிலும் நடைபெற உள்ளது. 4 தொகுதிகளுக்கும் பதிவான ஓட்டுகள் இன்று மாலைக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக மேல்-சபையில் 4 ஆசிரியர்-பட்டதாரிகளுக்கான தேர்தலில் கர்நாடக மேல்-சபை முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பசவராஜ் ஹொரட்டி 7 முறை ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மேல்-சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது 8-வது முறையாக அவர் பா.ஜனதா கட்சி சார்பில் களமிறங்கி உள்ளார். இதனால் இந்த முறையும் அவர் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேல்-சபையில் 4 தொகுதிகளுக்கும் நடந்த தோ்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக 4 தொகுதிகளிலும் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கர்நாடக மேல்-சபை தேர்தல் முடிவை ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஓட்டு எண்ணிக்கையையொட்டி மைசூரு, பெலகாவியில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்