பஞ்சாப்பில் கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; காருக்கு தீ வைப்பு
பஞ்சாப்பில் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் நிறுத்தி இருந்த காருக்கு தீ வைத்து தப்பி சென்றனர்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தார்ன் தரன் மாவட்டத்தில் பட்டி என்ற பகுதியில் அமைந்த கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்குள் மர்ம நபர்கள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கிறிஸ்து சிலையை தாக்க முயற்சித்து உள்ளனர்.
ஆலயத்தில் இருந்த கார் ஒன்றின் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மூத்த போலீஸ் சூப்பிரெண்டு தில்லான் தலைமையில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இந்த தாக்குதலில், 4 பேர் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. கத்தோலிக்கர்கள் வழிபடும் அந்த ஆலயத்தின் பாதிரியார் தாமஸ் கூறும்போது, எங்களுடைய ஆலய வளாகத்திற்கு 4 பேர் வந்தனர். அவர்கள் சிலைகளை அடித்து, நொறுக்கி வாகனங்கள் மீது தீ வைத்தனர்.
25 நிமிடங்கள் வரை அவர்கள் இங்கிருந்தனர். மக்களை அச்சுறுத்தவும் செய்தனர். ஆலய பாதுகாவலரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறியுள்ளார். இதன்பின்பு, ஐ.ஜி. வந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எங்களுக்கு உறுதி அளித்து சென்றார் என கூறியுள்ளார்.