மந்திரிகளுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும்

புதிதாக பதவி ஏற்றுள்ள மந்திரிகளுக்கு கூடிய விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-24 22:10 GMT

பெங்களூரு:-

மந்திரிகள் அறிமுகம்

கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் நேற்று புதிய சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். முன்னதாக சபை தொடங்கியதும் தற்காலிக சபாநாயகராக இருந்த தேஷ்பாண்டே, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று இருப்பதால், அவர்களுக்கு மந்திரிகளை அறிமுகப்படுத்தி வைக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கூறினார்.

அதன்படி, சித்தராமையாவிடம், தற்காலிக சபாநாயகரிடம் மந்திரிகளை அறிமுகப்படுத்தி வைக்க அனுமதி கோரினார். அவரும் அனுமதி வழங்கியதால், துணை முதல்-மந்திரி, 8 மந்திரிகளை சபையில் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

விரைவில் துறைகள் ஒதுக்கப்படும்

அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எழுந்து, முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு வாழ்த்துகள். மந்திரிகளுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. துறைகள் ஒதுக்கிய பின்பு சபையில் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்டு முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

புதிய மந்திரிகளுக்கு கூடிய விரைவில் துறைகள் ஒதுக்கப்படும். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது, மந்திரிகள் யாரும் நியமிக்கப்படாததால், அவர் ஒருவரே மாநிலம் முழுவதும் சென்று வந்தார். மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்கும் விவகாரத்தில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உங்களது ஆலோசனைக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே பசவராஜ் பொம்மை எழுந்து, உங்களது நலனுக்காகவே துறைகள் ஒதுக்க கூறினேன். மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்காத விவகாரத்தில் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்