மைசுகர் சர்க்கரை ஆலையில் மந்திரி செலுவராயசாமி திடீர் ஆய்வு

மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலையில் மந்திரி செலுவராயசாமி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்நாடக அரசு குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-22 21:26 GMT

மண்டியா:-

மந்திரி செலுவராயசாமி

மண்டியா மாவட்டத்திற்கு நேற்று மந்திரி செலுவராயசாமி வந்தார். அவர் நேராக மைசுகர் சர்க்கரை ஆலைக்கு சென்று ஆய்வு நடத்தினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசுகர் சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவ்வாறு தவறான தகவல்களை கூறுகிறவர்கள் இங்கு வந்து நேரில் பார்க்க வேண்டும். தற்போது 1,000 முதல் 1,500 டன் வரை கரும்புகள் அரவை செய்யப்படுகிறது. இது நாளடைவில் 30 ஆயிரம் டன் வரை அதிகரிக்க கூடும்.

வதந்திகளை பரப்பும்...

மைசுகர் சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா அமல்படுத்தி வருகிறார். பட்ஜெட்டிலும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றை விரைவில் சரிசெய்வோம். காங்கிரஸ் அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

யாரும் அரசு தொடர்பாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகளிர் அரசு கல்லூரி

அதையடுத்து மந்திரி செலுவாயசாமி மண்டியாவில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடந்த கல்வி மற்றும் கலாசார விழா, விளையாட்டு விழா மற்றும் தேசிய சேவை திட்ட செயல்பாடுகள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டார். மேலும் கல்லூரியில் உள்ள வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மாணவிகளிடமும், கல்லூரி பேராசிரியைகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்