மோசமான வானிலை எதிரொலி: மேகாலயா முதல்-மந்திரியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

மோசமான வானிலை காரணமாக மேகாலயா முதல்-மந்திரி கொன்ராட் சங்மா பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2022-11-02 21:13 GMT

ஷில்லாங்,

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகிப்பவர், கொன்ராட் சங்மா (வயது 44). இவர் நாடாளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகனும், தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார்.

இவர் நேற்று மேற்கு கரோ மலை மாவட்டத்தின் தலைநகரான டுராவுக்கு சென்று விட்டு, தலைநகர் ஷில்லாங்கிற்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் அப்போது திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதனால், அப்பர் ஷில்லாங் மேம்பட்ட இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவது ஆபத்தானது என விமானிகள் கருதி ரி போய் மாவட்டத்தில் உமியம் என்ற இடத்தில் உள்ள யூனியன் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரை இறக்கினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி முதல்-மந்திரி கொன்ராட் சங்மா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருந்ததாவது:-

டுராவில் இருந்து திரும்பும் வழியில் வானிலை மோசமானதால் உமியம் யூனியன் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. ஆனால் அங்கு நான் சிறிது நேரம் நடந்து, அந்தக் கல்லூரி வளாகத்தின் அழகான காட்சிகளை ரசித்தேன். கல்லூரி அதிகாரியை சந்தித்தேன். கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டேன். அவர்களின் விருந்தோம்பலுக்கு எனது நன்றி. வானிலை உண்மையிலேயே கணிக்க முடியாததாக இருந்தது. என்ன ஒரு இனிய நாள்! என்னை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த கேப்டனுக்கும், விமானிக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டி அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அவர் கல்லறைத்திருநாளையொட்டி, தனது தந்தை பி.ஏ.சங்மாவின் நினைவிடத்துக்கு தாயாருடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்