முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு: ராஜினாமா முடிவை கைவிட்ட உத்தரபிரதேச மந்திரி
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடனான சந்திப்பை தொடர்ந்து ராஜினாமா முடிவை உத்தரபிரதேச மந்திரி கைவிட்டார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜல்சத்தி துறை இணை மந்திரியாக இருப்பவர் தினேஷ் காதிக். அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த கடிதம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இந்தநிலையில் மந்திரி தினேஷ் காதிக் நேற்று லக்னோவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த தினேஷ் காதிக், 'இந்த அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாளர் முதல்-மந்திரிதான். அவரிடம் எனது கோரிக்கைகளை கூறியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பார். நான் ராஜினாமா செய்யப்போவதில்லை. எனது பணியை (மந்திரி பொறுப்பு) தொடருவேன்' என்று தெரிவித்தார்.