பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி: போட்டி போட்டு செல்பி எடுத்து செல்லும் வாடிக்கையாளர்கள்
பிரதமர் மோடியைப்போல் தோற்றமளிப்பதால் அந்த பகுதியில் அனில் பாய் தக்கர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.;
காந்திநகர்,
உலகத்தில் ஒரே மாதிரியான உருவம் கொண்ட ஏழு பேர் இருப்பார்கள் எனச் சொல்லப்படுவது உண்டு. இதை நாம் சில திரைப்படங்கள் மூலமாக பார்த்திருப்போம். 'இதெல்லாம் நிஜத்துல நடக்காது' என நினைத்தும் இருப்போம். அப்படித்தான் குஜராத்திலும் பிரதமர் நரேந்திர மோடி போல தோற்றம் கொண்ட ஒருவரைப் பார்த்து பலர் ஏமாந்து போகிறார்கள்.
குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் பானி பூரி விற்பனை செய்யும் அனில் பாய் தக்கர்தான், பிரதமர் நரேந்திர மோடியைப் போல தோற்றம் கொண்டுள்ளார். அத்துடன் பிரதமர் மோடியின் கோட் போல உடைகளை அவர் உடுத்துகிறார். அத்துடன் மோடி போல கண்ணாடி, சிகையலங்கரம் ஆகியவற்றை செய்து மிகவும் பிரபலம் ஆகி விட்டார். இவரது பானி பூரிக்கடைக்கு புதிதாக யார் வந்தாலும், ஒரு நிமிடம் திகைத்து விடுவார்கள். அதற்குக் காரணம், அனில் பாயின் தோற்றம், மோடியின் முகத்தோற்றத்துடன் அவ்வளவு ஒத்துப் போகிறது.
பிரதமர் நரேந்திர மோடியைப் போல வெள்ளைத் தாடி கொண்ட அனில் பாய் தக்கர், குஜராத்தில் உள்ள ஜுனாகத் பகுதியைச் சேர்ந்தவர். தனது 18 வயதில் இருந்து துளசி பானி பூரி என்ற கடையை இவர் நடத்தி வருகிறார். இந்த கடை இவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடியைப் போல தோற்றமளிக்கும் தக்கரின் ஸ்பெஷல் லுக்கைப் பார்த்து கவரப்பட்ட வாடிக்கையாளர்கள் அவரிடம் வந்து பானிபூரி சாப்பிட்டு விட்டு போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
சுமார் 71 வயதான தக்கர், பிரதமர் நரேந்திர மோடியின் உண்மையான தீவிர ரசிகர் ஆவார். பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் அபியான் மூலம் ஈர்க்கப்பட்டு, தனது கடை மற்றும் சுற்றியுள்ள பகுதியின் தூய்மைக்கு தக்கர் முன்னுரிமை அளித்து வருகிறார்.
இதுகுறித்து அனில் பாய் தக்கர் கூறுகையில்,
பிரதமர் மோடியின் தோற்றத்தை மக்கள் மிகவும் விரும்புகின்றனர். உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என்னிடம் வந்து போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களது அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். கடந்த 23-ம் தேதி எடுக்கப்பட்ட இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.