கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை; முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-22 18:45 GMT

பெங்களூரு:

மின்சாரத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் 32 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன?. நான் 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தபோது மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அதாவது 14 ஆயிரத்து 48 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 27 ஆயிரத்து 780 மெகாவாட்டாக அதிகரித்தது.

அனல்மின் நியைங்களில் ஈரப்பதமாக உள்ள நிலக்கரியை பயன்படுத்தக்கூடாது. கிரகஜோதி திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் திருட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் துணை மின்நிலையங்கள் அமைக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மின் உற்பத்தி நிலை குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் நசீர் அகமது, முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், மின்துறை கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ்குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்