கற்பழித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீதான போக்சோ வழக்கு ரத்து
கற்பழித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், வாலிபர் மீதான போக்சோ வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உள்ளது.
பெங்களூரு: கற்பழித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், வாலிபர் மீதான போக்சோ வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உள்ளது.
மைனர் பெண் பலாத்காரம்
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் 2 பேரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மைனர் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மைனர் பெண் 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் அவரை வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது குழந்தையும் உள்ளது.
போக்சோ வழக்கு ரத்து
இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி வாலிபர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், 'மனுதாரருக்கு திருமணம் முடிந்து குழந்தையை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்தால் அது நீதியை சிதைவுப்படுத்தியது போல ஆகிவிடும். இதனால் மனுதாரர் மீதான போக்சோ வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என்று கூறினார்.