மணிப்பூர்: சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப்படை வீரர்
காயமடைந்த வீரர்கள் எவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இம்பால்,
தெற்கு மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே சண்டேல் மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள சாஜிக் தம்பாக் பகுதியில் பாதுகாப்புப்படையினர் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நேற்று ஒரு பாதுகாப்புப்படை வீரர் தனது குழுவில் உள்ள சக வீரர்கள் மேல் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டு படையில் இருந்த மற்ற வீரர்கள் முகாமை நோக்கி விரைந்துனர். அப்போது அங்கு சென்ற பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து கிடந்த 6 படை வீரர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காயமடைந்த 6 படை வீரர்களை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மணிப்பூர் காவல்துறை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'காயமடைந்தவர்களில் எவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவத்துக்கும் மாநிலத்தில் நடந்து வரும் மோதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் தெளிவாக தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்று பதிவிட்டுள்ளது.