மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-24 18:45 GMT

மங்களூரு-

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, சிவமொக்கா, சென்னை, கோழிக்கோடு மற்றும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக சர்வதேச விமான நிலையம் மங்களூருவில் தான் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மங்களூரு விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தடுக்க விமான நிலைத்தில் சுங்க வரித்துறை அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கடத்தல் சம்பவம் குறைந்த பாடில்லை. இந்தநிலையில், துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

பேஸ்ட் வடிவில் தங்கம்

அப்போது ஒருவரின் நடவடிக்கையில் சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில், தங்கத்தை பொடியாக்கி பேஸ்ட் வடிவில் பிஸ்ெகட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 107 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ. 6 லட்சத்து 47 ஆயிரத்து 350 இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை பஜ்பே போலீசிடம் சுங்க வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்