உத்தரகாண்டில் தாய், மனைவி, 3 மகள்களை கொடூரமாக கொலை செய்த நபர் கைது
உத்தரகாண்டில் ஒரு நபர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் 47 வயது நபர் ஒருவர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டோராடூன் மாவட்டம் நாககேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து டேராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் கமலேஷ் உபாத்யாய் கூறியதாவது:-
நாககேரில் வசிக்கும் மகேஷ் குமார் (வயது 47) தன்னுடைய தாய் பிதான் தேவி (வயது 75), மனைவி நிது தேவி (வயது 36) மற்றும் மூன்று மகள்கள் அபர்ணா, ஸ்வர்ணா மற்றும் அன்னபூர்ணா ஆகியோரை தினசரி பிரார்த்தனை செய்த பின்னர் கொன்றுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மகேஷ் குமார் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவர் குடும்பத் தேவைகளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.
மகேஷ் குமாரின் மற்றொரு மகள் ஷியாம் பவானி கொலை நடந்த போது தபோவனத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தார். மேலும், மகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தாயார் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.