ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்... உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழப்பு

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார்.

Update: 2024-09-15 06:36 GMT

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாளையாரில் நேற்று உணவு போட்டி நடைபெற்றது. இதில் இட்லி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சுரேஷ் (49 வயது) என்பவர் பங்கேற்றார். அவர் இட்லியை வேகமாக சாப்பிட்டபோது தொண்டையில் இட்லி சிக்கி, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர்.

பின்னர் அவர், அங்கிருந்து வாளையாரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்