மங்களூருவில் மலாலி மசூதி இடத்தில் சிவன் கோவில் இருந்தது; பிரசன்னம் பார்த்ததில் தகவல்

மங்களூரு அருகே மலாலி மசூதியில் இந்து கோவில் அமைந்திருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அஷ்டமங்கள பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் மசூதி இடத்தில் சிவன் கோவில் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

Update: 2022-05-25 21:24 GMT

மங்களூரு

மங்களூரு அருகே மலாலி மசூதியில் இந்து கோவில் அமைந்திருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அஷ்டமங்கள பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் மசூதி இடத்தில் சிவன் கோவில் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

மலாலி மசூதி

நாட்டில் பல்வேறு இடங்களில் மசூதி இடத்தில் இந்து கோவில் இருந்ததாக கூறப்படும் விவகாரம் தலை தூக்கியுள்ளது. இதேபோல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கஞ்சிமடா அருகே மலாலி கிராமத்தில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த மசூதியை சீரமைக்கும் பணிகள் நடந்தது. இதற்காக மசூதியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. அப்போது அதில் இந்து கோவில் இருந்ததற்கான சில அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டம் நடத்தி மசூதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். மேலும் இது தொடர்பாக மங்களூரு கோர்ட்டில் முறையிட்டு தடை ஆணையும் வாங்கினர். இதனால் மசூதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரசன்னம் பார்ப்பு

இந்த நிலையில் இந்து அமைப்பினர் தெய்வ பிரசன்னம் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இந்து அமைப்பினர் கேரளாவில் இருந்து கோபாலகிருஷ்ண பணிக்கர் என்பவரை பிரசன்னம் பார்க்க நேற்று வரவழைத்தனர். மலாலி கிராமத்தில் ஒரு மண்டபத்தில் வைத்து தெய்வ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கோபாலகிருஷ்ண பணிக்கர் முன்பு தாம்பூலத்தில் பூ, பழம் உள்ளிட்டவை வைத்து கோவில் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், 9 வெற்றிலையை எடுத்து அதில் மை தடவி அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்தார். இதைதொடர்ந்து அவர் கூறியதாவது:-

சிவன் கோவில் இருந்தது

மசூதி இடத்தில் இதற்கு முன்பு சிவன் கோவில் இருந்துள்ளது. மேலும் கோவில் அருகே மடமும் இருந்துள்ளது. காலப்போக்கில் கோவில் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தார். இதற்கு பயந்து யாரும் கோவில் பணியில் ஈடுபட வரவில்லை. இதனால் கோவில் மற்றும் மடம் இடமாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக சிவன் சிலையை பாதுகாத்த ஒருவர் அதனை எடுத்து சென்று பூஜை செய்து வருகிறார். ஆனால் சில பொருட்கள், கோவில் அடையாளங்களை விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. தற்போது மசூதி இடத்தில் அந்த பொருட்கள் மற்றும் அடையாளங்கள்தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மசூதி இடத்தில் சிவன் கோவில் கட்டுவது நல்லது. ஆனால் பிரச்சினை உள்ளதால் ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொள்ள வேண்டும். இல்லையெல் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார். பிரசன்னம் பார்க்கும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க மலாலி கிராமத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தற்போது பிரசன்னம் பார்த்தது மூலம் மலாலி மசூதி விவகாரம் பெரும் பேசும் பொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்