"எதிர்கட்சி ஆட்சியினை கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் : சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்" - கபில் சிபல்

எதிர்கட்சி ஆட்சியினை கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டிவருவதாக கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-07-04 07:37 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து தொடர் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் முதல்-மந்திரி பதவி பகிர்வு பிரச்சினையில், கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. தனது கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார்.

பின்னர் சிவசேனாவில் பிளவை ஏற்படுத்திய ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜனதா கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராத திருப்பமாக மராட்டியத்தில் பிரதான எதிர்க்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உடைந்தது.

சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் ராஜ்பவன் சென்று பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்தார். அடுத்த சில மணி நேரத்தில் ராஜ்பவனில் நடந்த விழாவில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இது நாடு முழுவதும் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சியின் ஆட்சியை பாஜக தீவிரம் காட்டி வருவதாக முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடபாக அவர் தனது டுவிட்டரில், " பாஜகவின் பதவித் தூண்டுதலால் கவிழ்க்கப்பட்ட எதிர்க்கட்சி அரசாங்கங்கள் விவரம்:-

உத்தரகாண்ட் அரசு (2016)

அருணாச்சல பிரதேச அரசு (2016)

கர்நாடகா அரசு (2019)

மத்திய பிரதேச அரசு (2020)

மராட்டிய அரசு (2022)

இப்போது இதையெல்லாம் சட்டம் அனுமதிக்கிறதா..?? இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்" என்று அதில் கபில் சிபல் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்