தற்காலிகமாக தப்பியது ஷிண்டேவின் மராட்டிய அரசு: தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் மராட்டிய மாநில அரசு.
புதுடெல்லி,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 16-ந்தேதி ஒத்திவைத்தது. சபாநாயகரின் அதிகாரம் தொடர்புடைய நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு உடனடியாக மாற்ற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17-ந்தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு வெளியானது.
அதில், சிவசேனா கட்சி, சின்னம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மராட்டியத்தில் சபாநாயகர் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது - தலைமை நீதிபதி
உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், இந்த நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கலாம். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்துவிட்டதால் இப்போது முந்தைய நிலை தொடரும் என அறிவிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு.
மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்ததில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.