865 கிராமங்களை மராட்டியத்துடன் சேர்க்க கோரி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்

865 கிராமங்களை தங்களுடன் சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மராட்டியத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

Update: 2022-12-27 20:17 GMT

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடகத்தில் உள்ள பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த விஷயததில் இரு மாநிலங்களுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து, நல்லிணக்கத்தை காப்பாற்றும்படியும், மோதலை தவிர்க்க இரு மாநிலமும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 3 பேர் கொண்ட இரு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன.

மராட்டிய சட்டசபையில் தீர்மானம்

இந்த நிலையில் மராட்டிய மாநில சட்டசபையில் பெலகாவி மற்றும் மராத்தி மொழி பேசும் 865 கிராமங்களை தங்கள் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கண்டிக்கிறேன்

மத்திய அரசு நீண்ட காலத்திற்கு முன்பே மாநிலங்கள் மறுவரையறை சட்டத்தை கொண்டு வந்து மொழிவாரி மாநிலங்களை பிரித்தது. இரு மாநில மக்களும் நிம்மதியாக உள்ளனர். ஆனால் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகத்தின் பகுதிகளை விட்டு கொடுக்குமாறு மராட்டியம் கேட்கிறது.

கர்நாடகத்தில் உள்ள கார்வார், பெலகாவி உள்ளிட்ட பகுதிகளை தங்கள் எல்லைக்குள் சோ்க்குமாறு கோரி மராட்டிய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன்.

ஒரு அங்குல நிலத்தை கூட...

கர்நாடகத்தில் ஒரு அங்குல நிலத்தை கூட நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். இந்த எல்லை பிரச்சினையில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மராட்டியம் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும்போது, மராட்டியம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

அரசியல் கட்சி தலைவர்கள்

மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் மராட்டிய சட்டசபை தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்