மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைக்காது; மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் கருத்து
மோடியின் மும்பை வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் வருகை
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவர் சி.எஸ்.எம்.டி. - சோலாப்பூர், சி.எஸ்.எம்.டி. - ஷீரடி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கடந்த மாதம் அவர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கவும் மும்பை வந்து இருந்தார்.
மும்பை மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி ஒரு மாதத்துக்குள் 2 முறை மும்பை வந்து நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.
காங்கிரஸ் தாக்கு
மாநில காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
தேர்தல் இல்லை என்றால் மோடி மும்பை, மராட்டியத்தை நினைவில் கூட வைத்திருக்க மாட்டார். மெட்ரோ ரெயில், வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைப்பதை காரணமாக வைத்து அவர் மும்பை வந்தார். அவர் மும்பை வருவது மகிழ்ச்சி தான். ஆனால் அவருக்கு மராட்டியத்தின் பிரச்சினைகள் பற்றி தெரியவில்லை. அவர் விவசாயிகள் தற்கொலை பற்றி பேசவில்லை. 2014-ம் ஆண்டு முன் அவர் விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி பேசினார். மோடியின் மும்பை வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சய் ராவத் விமர்சனம்
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-
தற்போது நிலையை பார்த்தால் பிரதமர் மோடி மும்பையில் வீடு வாங்கிவிடுவார் அல்லது ராஜ்பவனுக்கு குடிபெயர்ந்து மாநகராட்சி தேர்தல் முடியும் வரை நகரில் தங்கிவிடுவார் போல தெரிகிறது. என்னதான் செய்தாலும் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே அணி, பா.ஜனதா வெற்றி பெறாது. மோடி வந்தாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
நான் பிரதமரை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை. டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது அவர் மும்பை வருகிறார். எதிர்க்கட்சிகள் அதானி போன்ற விவகாரங்களில் அரசை சூழ்ந்து உள்ள போது, வந்தே பாரத் ரெயிலுக்காக மும்பை வந்து உள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற பிரதமர் விரும்புகிறார். நாங்களும் தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.