ஒரு மாதகால மகா மேளா தொடங்கியது - திரிவேணி சங்கமத்தில் 5 லட்சம் பேர் புனித நீராடினர்
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடியதுடன், கங்கையில் பால் ஊற்றி சடங்குகள் செய்து வழிபட்டனர்.;
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. அங்கு புனித நீராடும் ஒரு மாத கால 'மகா மேளா' நேற்று தொடங்கியது. மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, முதல் நாளிலேயே புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிரையும், பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராட தொடங்கினர்.
புனித நீராடியதுடன், கங்கையில் பால் ஊற்றி சடங்குகள் செய்து வழிபட்டனர். காலை 10 மணிக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகா மேளாவையொட்டி, 500 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் காவல்துறையின் நீச்சல் வீரர்கள் படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.