மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் - நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை மந்திரி தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

Update: 2022-12-09 23:58 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

கட்டிட வடிவமைப்பில் செய்யப்பட்ட மாறுதல் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால், திட்ட செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்துவிட்டது.

மதுரை எய்ம்ஸ் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, கவலை வேண்டாம். கட்டுமான பணியை திட்டமிட்டபடி முடிப்போம். மதுரையில், நல்ல, தரமான எய்ம்ஸ் அமையும்.

மருத்துவ கல்லூரிகளில் உரிய கல்வித்தகுதி படைத்த ஆசிரியர்களை நியமிப்பது முக்கியம். மாநில அரசு மருத்துவ கல்லூரியாக இருந்தால், அது மாநில அரசின் பொறுப்பு. தனியார் மருத்துவ கல்லூரியாக இருந்தால், அந்த கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பு. இதுதொடர்பாக மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து உறுதிமொழியை பெற்று வருகிறோம். அத்துடன், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு ஆய்வு குழுக்களை அனுப்பிவைக்கிறோம்.

உரிய கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லூரிகள் மீது கடந்த காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருங்காலத்திலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவ கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

ஏனென்றால், மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதுடன், நல்ல டாக்டர்களையும் நாம் உருவாக்க வேண்டி உள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்