மத்திய பிரதேசம்: கொலை வழக்கில் பா.ஜ.க. தலைவரின் ஆடம்பர ஓட்டல் இடித்து தரைமட்டம்

மத்திய பிரதேசத்தில் கார் மோதி நபரை கொலை செய்த வழக்கில் பா.ஜ.க. தலைவரின் ஆடம்பர ஓட்டல் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.;

Update:2023-01-04 08:26 IST



சாகர்,


மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் மகாரோனியா பகுதியருகே ஜெய்ராம் பேலஸ் என்ற பெயரில் ஆடம்பர ஓட்டல் ஒன்று இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் இந்த ஓட்டலை அதிகாரிகள் நேற்று மாலை இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

சந்த் குப்தாவின் மனைவி மீனா நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு கவுன்சிலரான கிரண் யாதவ் என்பவரிடம் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இந்த ஆத்திரத்தில் கிரணின் மருமகனான ஜெகதீஷ் யாதவ் என்பவரை சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு படுகொலை செய்து உள்ளனர். கடந்த டிசம்பர் 22-ந்தேதி சந்த் காரை ஏற்றி ஜெகதீஷை கொலை செய்து உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் சந்த் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 5 பேரை கைது செய்துள்ளனர். சந்த் தப்பி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, அவரது ஓட்டலை இடித்து தள்ளுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தது.

இதன்படி, இந்தூரில் இருந்து சிறப்பு குழு ஒன்று ஓட்டலை இடிக்க சென்றது. ஓட்டலில் 60 டயனமைட் எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை இணைத்து, ஒரு சில வினாடிகளில் ஓட்டல் இடித்து தள்ளப்பட்டது.

அப்போது, சாகர் மாவட்ட கலெக்டர் தீபக் ஆரியா, டி.ஐ.ஜி. தருண் நாயக் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்