மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 27-ம் தேதி பிரசாரத்தை தொடங்கிறார் பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இ
போபால்:
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன. இம்மாநிலத்தை பொறுத்தவரை பல சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி பெண் வாக்காளர்கள் கையில் உள்ளது. இதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க பாரதிய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரசும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என தெரிவித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்தியபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சர்மா தெரிவித்து உள்ளார்.
அன்று ஒருநாள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தலைநகர் போபாலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும் அவர் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறார். 10 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட இருக்கிறார்.
அப்போது தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட பா.ஜனதா தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மத்தியபிரதேசத்தில் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி 27-ந்தேதி ஜபல்பூர்-இந்தூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் தர் பகுதியில் ரத்தசோகை நோயை தடுப்பது தொடர்பான நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
கடந்த 2½ மாதங்களில் பிரதமர் மோடி 3-வது முறையாக மத்தியபிரதேசம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வருகிற 22-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் வருகிறார். அவர் பலாகத் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதம் இருக்கும் நிலையில் தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரம் செய்ய உள்ளதால் மத்தியபிரதேச அரசியல் களம் இப்போதே பரபரப்பாகி இருக்கிறது.