முதல் மனைவியின் கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த காதல் கணவன் - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு
தன்னுடைய கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த காதல் கணவனின் செயலை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்த முதல் மனைவி
மல்கான்கிரி,
வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார்.
அப்போது அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சோதனை முடிவில் ரஞ்சிதாவின் ஒரு கிட்னி காணாமல் போயிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதாவுக்கு, அப்போது தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்திருக்கிறது.
கணவரின் கட்டாயத்தின் பேரில் நடந்த அந்த அறுவை சிகிச்சையில் கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த ரஞ்சிதா பிரஷாந்திடம் விசாரித்திருக்கிறார். அந்த விசாரணையில் மனைவி ரஞ்சிதாவுக்கே தெரியாமல் அவரது கிட்னியை கணவர் பிரசாந்த் திருடி விற்றிருக்கிறார். பிரசாந்த் வேலை வெட்டிக்கு செல்லாமல் நாட்களை கழித்து வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் தான் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ரகசிய தகவல் பிரசாந்துக்கு தெரிய வந்துள்ளது. அப்போது ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே, உடனே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரசாந்த் கிட்னியில் கல் இருப்பதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
கணவன் தன் மீது அளவில்லாத அன்பு வைத்திருப்பதாக நினைத்து ரஞ்சிதாவும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். திட்டப்படி ரஞ்சிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மருத்துவர்கள் உதவியுடன் கல்லை எடுப்பதாக கூறி ஒரு கிட்னியை எடுத்துள்ளார் பிரசாந்த்.
சிகிச்சைக்கு பிறகு கிட்னியை விற்று நிறைய பணம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை வைத்து பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதை அறிந்த மனைவி ரஞ்சிதா பிரசாந்தை கைது செய்ய கோரி ஆதாரங்களோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் இருந்த பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.