நாடாளுமன்ற தேர்தலில் நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் போட்டி?

எந்த தொகுதியில் சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

Update: 2024-02-27 09:12 GMT

புதுடெல்லி,

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய நிதி மந்திரியாக உள்ளார். அதேபோல் ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இருவரையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இவர்கள் 2 பேரும் தற்போது வரை தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை எம்.பி.யாகவே அரசியலில் பயணிக்கிறார். ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் தூதர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து ஓய்வுக்கு பிறகு பா.ஜ.க.,வில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாகி உள்ளார். இத்தகைய சூழலில் தான் இருவரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதவிர கர்நாடகாவில் உடுப்பி - சிக்கமகளூர், உத்தர கன்னடா, ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றிலும் இவர்கள் களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க. தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் தான் முதல் முறையாக பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியுமான பிரகலாத் ஜோஷி (கர்நாடகாவில் தார்வார் எம்.பி) அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில்,

அவர்கள் (மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பெயரை குறிப்பிடாமல்) வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதற்கான வாய்ப்பு என்பது அதிகமானதாக அல்லது குறைவானதாக இருக்கலாம். இவர்கள் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்பது தெரியவில்லை.

இருவரும் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் மாநிலங்களில் இருந்து போட்டியிடுவார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுபற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

இதையடுத்து அவர்கள் பெங்களூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரகலாத் ஜோஷி,

எதுவும் முடிவாகாத பட்சத்தில் இந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும். நான் கூறியது என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க. என்பது தேசிய கட்சி. இந்த விஷயத்தில் கட்சி மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்