ஏப்ரல், மே மாதங்களில் சிக்கமகளூருவில் ரூ.104 கோடிக்கு மது விற்பனை
சிக்கமகளூருவில் ஏப்ரல், மே மாதங்களில் ரூ.104 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. சட்டசபை தேர்தல் நடந்ததால் கூடுதல் வருவாய் கிடைத்ததாக கலால் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.;
சிக்கமகளூரு:
சட்டசபை தேர்தல்
கர்நாடகத்தில் கடந்த 10-ந்தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், மதுபானம் விற்பனை செய்ய தேர்தல் அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். பார்களில் மதுபானம் விற்பனை செய்யும், மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும், மது விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தேர்தல் நடந்ததால் வழக்கத்தை விட கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.104 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலால் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரூ.104 கோடிக்கு மது விற்பனை
இதுகுறித்து கலால் துறை அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் நடப்பு மே மாதம் என 2 மாதங்களில் மட்டும் ரூ.104 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சட்டசபை தேர்தல் நடந்ததால் கூடுதல் மது விற்பனை நடந்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் மது விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சட்டசபை தேர்தல் சமயத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாகவும், கடத்தியதாகவும் ரூ.1.92 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.