வங்காளதேச இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில் 7 பேருக்கு ஆயுள்-ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
வங்காளதேச இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்து, கொடூரமாக தாக்கிய வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு: வங்காளதேச இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்து, கொடூரமாக தாக்கிய வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு
பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 18-ந் தேதி வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் பாட்டிலால் கொடூரமாக தாக்கி இருந்தார்கள். இளம்பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இளம்பெண்ணை கற்பழித்ததாக சாந்த் மியா, முகமது ரிபாக்துல் இஸ்லாம், முகமது அலமின் உசேன், ரகிபுல் இஸ்லாம், முகமது பாபு சேக், முகமது தலிம், அஜிம் உசேன், தனியா கான், முகமது ஜமால் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் 28 நாட்களில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ராமமூர்த்திநகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.
7 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்ட கர்நாடக அரசும், வழக்கில் ஆஜராகி வாதாட சிறப்பு வக்கீலாக வீரண்ணா திகாடியை நியமித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கின் விசாரணை சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது வழக்கில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளார்.
அதாவது சாந்த் மியா, முகமது அலமின் உசேன், முகமது ரிபக்துல் இஸ்லாம், முகமது பாபு சேக், முகமது தலிம், அஜிம் உசேன், ரகிபுல் இஸ்லாம் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், தனியா கானுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 10 குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 11-வது மற்றும் 12-வது குற்றவாளிகளுக்கு 9 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.