சித்தராமையா ஆட்சி ஊழல்களை அம்பலப்படுத்துவோம் - எடியூரப்பா
கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். சித்தராமையா ஆட்சி ஊழல்களை அம்பலப்படுத்துவோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
சுற்றுப்பயணம்
கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தோ்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் அகில இந்திய அளவில் நடைபெறும் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. அவரது இந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது பாதயாத்திரையில் அதிக எண்ணிக்கையில் அக்கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அந்த பாதயாத்திரைக்கு போட்டியாகவும் பா.ஜனதா தலைவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். அதாவது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் நேற்று ராய்ச்சூரில் இந்த பயணத்தை தொடங்கினர்.
இதையொட்டி அங்கு நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
ராகுல் காந்தி குழந்தை
பா.ஜனதா ஆட்சி மீது சித்தராமையா ஊழல் புகார்களை கூறுகிறார். சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்துவோம். அதுகுறித்து விசாரணை நடத்தி அவரை எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்துவோம். பிரதமர் மோடி எந்த ஊழலிலும் ஈடுபடாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவரையே ராகுல் காந்தி குறை சொல்கிறார். ராகுல் காந்தி குழந்தை.
ராபர்ட் வதேரா செய்த முறைகேடுகளின் பட்டியல் உள்ளது. நேஷனல் ஹெரால்டு ஊழல் யாருக்கும் தெரியாதா?. சித்தராமையா ரூ.25 லட்சம் மதிப்புள்ள கைகெடிகாரத்தை பெற்றார். இதை யாரிடம் இருந்து அவர் பெற்றார்?. ராய்ச்சூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரியிடம் கூறியுள்ளேன். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சொல்கிறார்கள்.
தகுதி இல்லை
ஆனால் வருகிற சட்டசபை தோ்தலில் பா.ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சோனியா காந்தி குடும்பத்தின் பெயரை பயன்படுத்தி நாம் சொத்துகளை குவித்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் கூறினார். காங்கிரசின் ஊழல்களுக்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை.
பிரதமர் மோடியை சித்தராமையா விமர்சிக்கிறார். அவரை குறை சொல்லும் தகுதி சித்தராமையாவுக்கு இல்லை. மோடியின் கால் அருகே அமருவதற்கு கூட அவருக்கு தகுதி இல்லை.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
அரசியல் களம் சூடுபிடித்தது
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளை தொடங்கிவிட்டன. ராகுல் காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. இப்போது பா.ஜனதா தலைவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
ஜனதா தளம் (எஸ்) தலைவர்களும் ஏற்கனவே சுற்றுப்பயணத்தை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். மூன்று அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடும் போட்டி
அடுத்தடுத்து வரும் நாட்களில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், மத்திய மந்திரிகள் கா்நாடகத்திற்கு வருகை தர உள்ளனர். இந்த முறை கர்நாடக சட்டசபை தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டியை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
தன்வசம் உள்ள கர்நாடகத்தை எக்காரணத்தை கொண்டும் பா.ஜனதா விட்டுக்கொடுக்காது. அதற்காக தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்ள அக்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடகத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.