சித்தராமையா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்போட்டனர்

சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்போட்டனர்.

Update: 2023-05-10 20:33 GMT

பெங்களூரு, மே.11-

நிர்மலா சீதாராமன்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து ஓட்டுப்போட்டதை பார்க்க முடிந்தது. இதில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அதாவது காலை 7.07 மணிக்கே துமகூருவில் உள்ள சித்தங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்கஸ்ரீ மடத்திற்கு சொந்தமான தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

காலை 7.33 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் உள்ள பி.இ.எஸ். பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா காலை 7.47 மணிக்கு தனது குடும்பத்துடன் சென்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதிக்கு உட்பட்ட ஆடாலி சவுதாவில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். அவருடன் அவருடைய மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து ஓட்டுப்போட்டனர். அவர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

பா.ஜனதாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பேச்சாளரான பசனகவுடா பட்டீல் எம்.எல்.ஏ. நேற்று விஜயாப்புரா டவுனில் உள்ள எஸ்.எஸ். பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பா.ஜனதாவைச் சேர்ந்த மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட பேரேசந்திரா கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்று ஓட்டுப்போட்டார்.

ரேணுகாச்சார்யா

பா.ஜனதாவைச் சேர்ந்த மற்றொரு சர்ச்சை பேச்சாளர் ரேணுகாச்சார்யா நேற்று காலை தனது மனைவி சுமா ரேணுகாச்சார்யாவுடன் சேர்ந்து ஒன்னாளி டவுன் ஹிரேமட் பகுதியில் உள்ள சன்னகேஸ்வரா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடக காங்கிரசில் உள்ள பெண் தலைவர்களில் முக்கியமானவர் லட்சுமி ஹெப்பால்கர் ஆவார். நேற்று காலை 9.50 மணியளவில் அவர் விஜயநகர்(மாவட்டம்) டவுனில் உள்ள மராத்தி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்தார். அவர்கள் அனைவரும் வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.

அதுபோல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காலை 9.07 மணியளவில் ஹாவேரி மாவட்டம் சிக்காவி டவுனில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று ஓட்டுப்போட்டார். முன்னதாக அவர் தனது குடும்பத்துடன் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் அசோக்நகரில் உள்ள தனது குலதெய்வ கோவிலான மாருதி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள்செய்து வழிபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெகதீஷ் ஷெட்டர்

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து போட்டியிட்டுள்ளார். நேற்று அவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கேசுவாப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. பள்ளிக்கூடத்தில் தனது குடும்பத்துடன் சென்று ஓட்டுப்போட்டார்.

மேலும் பெங்களூரு விஜயநகரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓட்டுச்சாவடியில் மடாதிபதி நிர்மலாநந்தநாத சுவாமிகள் வாக்களித்தார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் நாகஷெட்டிகொப்பாவில் உள்ள விவேகானந்தா ரோட்டரி பள்ளிக்கூடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று ஓட்டுப்போட்டார். அவர் தன்னுடைய மனைவி, 2 மகள்கள் மற்றும் பேத்தியுடன் வந்து ஓட்டுப்போட்டார். இதுபோல் உப்பள்ளியில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ேஷாபாவும் ஓட்டுப்போட்டார்.

டி.கே.சிவக்குமார்-சித்தராமையா

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதிக்கு உட்பட்ட தொட்ட ஆலனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று தனது குடும்பத்தினருடன் மைசூரு(மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட தனது சொந்த ஊரான சித்தராமயனகுந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மகன் யதீந்திரா சித்தராமையா மற்றும் குடும்பத்தினர் ஓட்டுப்போட்டனர்.

முன்னதாக அவர் சித்தராமயனகுந்தி கிராமத்தில் உள்ள சித்தராமேஸ்வரர் கோவிலில் தனது குடும்பத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து சாமி கும்பிட்டார். பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் தனது மனைவி சுசீலம்மா மற்றும் மகளுடன் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, மகள் உள்ளிட்டோரும் ஓட்டுப்போட்டனர்.

மல்லிகார்ஜுன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது மனைவி ராதாபி மற்றும் குடும்பத்தினருடன் கலபுரகி(மாவட்டம்) டவுனில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார். மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும், தனது

மனைவியுடன் வந்து கலபுரகி டவுனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.இதில் பிரியங்க் கார்கேவின் மனைவி இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் நேற்று நேரில் வந்து தனது ஜனநாயக கடமையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமி-பரமேஸ்வர்

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கெத்தனஹள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி, மருமகள் ரேவதி ஆகியோரும் ஓட்டுப்போட்டனர். பா.ஜனதாவின் இளம் எம்.பி.யும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு ஜெயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

அவருடன் அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரும் ஓட்டுப்போட்டனர். துமகூரு மாவட்டம் திப்தூரில் பா.ஜனதாவைச் சேர்ந்த மந்திரி பி.சி.நாகேஷ் வாக்களித்தார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் ஓட்டுப்போட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் துமகூரு மாவட்டம்(டவுன்) சித்தார்த்தா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி கன்னிகாவும் ஓட்டுப்போட்டார்.

ஈசுவரப்பா-தேஜஸ்வி சூர்யா

பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சிவமொக்கா நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.எச்.சாலையில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஓட்டுப்போட்டார். அவருடன் அவரது மனைவி, மகன் காந்தேஷ், மருமகள் ஆகியோரும் வாக்களித்தனர். அதுபோல் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அவருடன் அவரது மனைவி பல்லவி, மகன் சமத் சூர்யா, தாய் ஒன்னம்மா ஆகியோரும் ஓட்டுப்போட்டனர். இதில் சமத் சூர்யா தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமலதா எம்.பி.

பா.ஜனதாவைச் சேர்ந்த மந்திரி வி.சோமண்ணா சாம்ராஜ்நகர்(மாவட்டம்) டவுன் பேட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி சைலஜாவும் சேர்ந்து தனது வாக்கை பதிவு செய்தார். நடிகையும், சுயேச்சை எம்.பி.யுமான சுமலதா மண்டியா மாவட்டம் தொட்டரசினகெரே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வரிசையில் காத்து நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சதானந்தகவுடா பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாதனது மனைவியுடன் நேற்று ஹாசன் மாவட்டம் படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்