பள்ளிகளுக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
அரசு பள்ளிகளில் பணிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் வட்டார மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்ைக அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு ஆஜராகி பாடங்களை எடுக்கிறார்கள். இதை கல்வித்துறை அதிகாரிகள் வழங்கும் அறிக்கை மூலம் அறிந்து கொண்டுள்ளேன். ஆனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. நான் கடந்த 12-ந் தேதி மண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள நெல்லிகெரே உயர் தொடக்கப்பள்ளிக்கு திடீரென ஆய்வுக்கு சென்றேன். அப்போது அங்கு காலை 10.30 மணி ஆகியும் 3 ஆசிரியர்களும் பள்ளிக்கு ஆஜராகவில்லை. இதனால் குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர்.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாமதமாக வந்தால் அத்தகையவர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.