தேர்தல் பத்திர விவரம் வெளியிட கால அவகாசம்: "மோடியின் உண்மையான முகத்தை மறைக்க கடைசி முயற்சி" - ராகுல் காந்தி

நன்கொடை வியாபாரத்தை மறைக்க பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Update: 2024-03-04 18:17 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

தேர்தல் பத்திரம் செல்லாது என சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கினர். இதனைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்த சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோடி தன்னால் இயன்றவரை முயல்கிறார். 

தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ள நிலையில், இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்.பி.ஐ. ஏன் விரும்புகிறது..?

ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கேட்டால் பருப்புகளில் கருப்பு எதுவும் இல்லை, முழு பருப்புகளும் கருப்பு என்று காட்டுகிறது.

நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி தங்கள் ஊழலை மறைக்க முயல்கின்றன.

தேர்தலுக்கு முன் மோடியின் உண்மையான முகத்தை மறைக்க இதுவே கடைசி முயற்சி" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்